டெல்லியை தலைமையாக கொண்டு செயல்படும் இந்திரா காந்தி திறந்த நிலை
பல்கலைக்கழகம், நாட்டிலேயே மிக அதிகமாக 30 லட்சம் மாணவர்களுக்கு
பட்டப்படிப்பை வழங்குகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் நாடு முழுவதும்
அங்கீகரிக்கப்பட்ட கல்வி மையங்கள் உள்ளது.
இம்மையத்தில்,
முதுநிலை, இளநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பட்டயப் படிப்புகள்
வழங்கப்படுகிறது. குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில்
கைவிட்டவர்கள், வேலை பார்த்துக் கொண்டே பகுதி நேரமாக பட்டம் படிப்பவர்கள்
என இந்த பல்கலைக்கழகம் பல பேரின் வாழ்வில் ஒளியை ஏற்றி வருகிறது.
இந்நிலையில்,
கல்வி பயில உரிய வசதி இல்லாத திருநங்கைகள் எந்த வித கட்டணமும் இல்லாமல்
அனைத்து விதமான படிப்புகளையும் தேர்ந்தெடுத்து, முற்றிலும் இலவசமாக
படிக்கலாம் என பல்கலைக்கழகம் இம்மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தது.
இந்த இலவச அறிவிப்பின் பின்னணி என்ன? என்பது தொடர்பாக தற்போது சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த
மாதம் நடைபெற்ற வீடியோ கலந்தாய்வில் பங்குபெற்ற கேரளாவின் கொச்சின்
பகுதியை சேர்ந்த திருநங்கை சமூகத்தை சேர்ந்த ஒருவர் ’இந்திரா காந்தி
திறந்தநிலை பல்கலைகழகம் திருநங்கை சமூகத்திற்காக இதுவரை என்ன
செய்திருக்கிறது?’ என கேள்வி எழுப்பியுள்ளார். இனி உங்களுக்கு
(திருநங்கையர்களுக்கு) தேவையான அனைத்து வகை கல்வியையும் இலவசமாக அளிக்க
தீர்மானித்துள்ளோம் என இந்திராகாந்தி பல்கலைகழக துணைவேந்தர் ரவிந்திர
குமார் பதில் அளித்தார்.
இந்த
சம்பவத்தை தொடர்ந்துதான், திருநங்கையரின் வாழ்க்கையை முன்னேற்றும்
நோக்கத்தோடு இலவச கல்வி திட்டத்தை இந்திராகாந்தி பல்கலைகழகம் அறிவித்தது
என்னும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
திருநங்கையினருக்கு
மாணவர்கள் என்னும் தகுதியை வழங்குவதன் மூலம் அவர்கள் வாழ்க்கை தரத்தை
உயர்த்த முடியும். அவர்கள் ஒரு மாணவராகவோ, வழக்கறிஞராகவோ, மருத்துவராகவோ
அல்லது கல்லூரி பேராசிரியராகவோ இருக்கும் பட்சத்தில் அவர்களது பாலினம்
குறித்து யாரும் கேள்வியெழுப்ப மாட்டார்கள் என இந்திராகாந்தி பல்கலைகழக
துணைவேந்தர் ரவிந்திர குமார் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment