எதிர்மறை
எண்ணங்கள் தோன்றுவதற்கு இடம் கொடுக்காமல் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு
வலிமை சேர்க்க வேண்டும். அப்போதுதான் அது மனதில் ஆழமாக பதியும். ஒருசிலர்
தேவையில்லாமல் எதையாவது யோசித்து கொண்டிருப்பார்கள். அதில் இருந்து மீண்டு
வரவும் முயற்சிப்பார்கள். ஆனால் அந்த எண்ணம் திரும்ப, திரும்ப மனதுக்குள்
உலா வந்து கொண்டே இருக்கும். அது அவர்களை பலகீனப் படுத்திவிடும்.
அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளைவிட
அவைகளை எப்படி சாதூரியமாக எதிர்கொள்கிறோம் என்பதில்தான் பிரச்சினைக்கு
தீர்வு காணும் வழிமுறை அடங்கி இருக்கிறது. அதற்கு மனதில் தோன்றும்
எண்ணங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. எதிர்மறையான எண்ணங்கள் தோன்றினால்
நிச்சயம் பிரச்சினையின் வீரியம் அதிகமாகுமே தவிர ஒருபோதும் முடிவுக்கு
வராது. மனமும் அலை பாய தொடங்கி விடும். அது குழப்பங்களுக்கு வழிவகுத்து
நிம்மதியை குலைத்துவிடும். மனதுக்குள் என்ன நினைக்கிறோமோ அதுதான் செயலில்
வெளிப்படும்.
அதனை தவிர்க்க எந்தவொரு செயலை செய்வதாக இருந்தாலும் எதிர்மறை எண்ணங்கள் தோன்ற இடம் கொடுக்காமல் நல்லவிதமாக சிந்திக்க வேண்டும். கவலையோ, மன அழுத்தமோ தோன்றுவதற்கு இடம் கொடுக்கும் விஷயங்களை பேசுவதை தவிர்க்க வேண்டும். நல்ல போதனைகளை, நல்ல கருத்துக்களை எடுத்துரைப்பவர்களுடன் பழக வேண்டும். மனதுக்குள் தேவையற்ற எண்ணங்கள் உருவாகி மன அழுத்தம் உண்டாவதை தவிர்க்க தியானம் மேற்கொள்ளலாம். அது மனதை ஒருநிலைப்படுத்தும். அமைதியை தேடி தரும்.
நோய் பாதிப்புக்கு ஆளாகிறவர்களிடம் ஒருபோதும் எதிர்மறை சிந்தனைகள் தோன்றக்கூடாது. சாதாரண தலைவலியாக கூட இருக்கலாம். அதனை குணமாக்குவதற்கு வழி தேடாமல், ‘வேறு என்னவெல்லாம் நோய் பாதிப்புகள் உருவாகப் போகிறதோ?’ என்று பயந்து கொண்டிருப்பது தேவையற்ற மன, உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.
கடுமையான நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் கூட எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுவதற்கு இடம் கொடுக்காமல் மன வலிமையுடன் போராடி நோயின் பிடியில் இருந்து மீண்டு வந்திருக்கிறார்கள். நல்ல எண்ணங்கள் நிச்சயம் நல்வழிப்படுத்தும். மனதைரியத்துடன் செயல்படும் வல்லமையை கொடுக்கும்.
Post a Comment